தமிழ்நாட்டில் அதிக அணைகளை கொண்ட பொள்ளாச்சி மக்களவை தொகுதியை வெல்வது யார்?

தமிழ்நாட்டில் 21வது நாடாளுமன்ற தொகுதி, கொங்கு மண்டலத்தில் குக்கிராமங்கள் அதிகம் நிறைந்த தொகுதிகளில் ஒன்றாக பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி உள்ளது. தமிழகத்திலேயே அதிக அணைகளை கொண்ட தொகுதியும் கூட. தனித்தொகுதியாக இருந்து மறுசீரமைப்புக்கு பின் கடந்த 2009ம் ஆண்டு பொதுத்தொகுதியாக மாறியது. இந்த தொகுதியில் பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. இங்கு தென்னை விவசாயமே பிரதான தொழில். இங்கு உற்பத்தியாகும் தென்னை நாரை மதிப்புக்கூட்டு பொருளாக்கி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, மத்திய தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கை.

இதுமட்டுமல்லாது, காந்தி தினசரி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்யும் காய்கறிகளில், அதிக விளைச்சலின்போது விலை குறையும் கால கட்டத்தில், அதனை சேமித்து வைத்து பயன்பெறுவதற்கான குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், கோவை மற்றும் திருப்பூர் பகுதி விவசாயிகளின் பிரதான கோரிக்கையில் ஒன்றான, ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்தி, அதன் மூலம் சேமிக்கப்படும் தண்ணீர் விவசாய பகுதிக்கும், குடிநீர் தேவைக்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் விவசாயிகளின் விருப்பம்.

அதேபோல், கோவை வருவாய் மாவட்டத்திலிருந்து, பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் என்பதும் மக்களின் முக்கிய கோரிக்கையில் ஒன்று. கோவையிலிருந்து, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூர், காருண்யா நகர் வழியாக மெட்ரோ ரயில் இயக்க வேண்டும். கிணத்துக்கடவின் மையப்பகுதியில் ஜாம் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகும்.

இந்த தொகுதி முதன் முறையாக 1951ல் உருவானது. இதில், திமுக வேட்பாளர்கள் கடந்த 1967, 1971, 1980ல் வெற்றி பெற்றனர். 1996ல் திமுக கூட்டணியில் தமாகா வேட்பாளர் வெற்றி பெற்றார். மீதமுள்ள தேர்தல்களில் காங்கிரஸ், அதிமுக, மதிமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் திமுக மற்றும் அதிமுக நேரடியாக 4வது முறையாக மோதுகிறது.

திமுக வேட்பாளராக மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமியும், அதிமுக வேட்பாளராக ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் என்ற கார்த்திக் அப்புசாமியும், பாஜ வேட்பாளராக வசந்தராஜனும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவினரே எம்எல்ஏ பதவி வகித்தாலும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இது திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக இருப்பதற்கு உதாரணமாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதால், மக்களின் பார்வை திமுக வசமே உள்ளதாக கருதப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் அதிக அணைகளை கொண்ட பொள்ளாச்சி மக்களவை தொகுதியை வெல்வது யார்? appeared first on Dinakaran.

Related Stories: