கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால் வீட்டு வாசலில் சாமியை நிறுத்தாமல் சென்றதாக புகார்

விழுப்புரம், ஏப். 16: விழுப்புரம் அருகே கோயில் வரவு செலவு கணக்கு கேட்டதால் வீட்டு வாசலில் சாமியை நிறுத்தாமல் சென்றதால் கொத்தனார் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே சிறுவாக்கூரை சேர்ந்தவர் வாசுதேவன், கொத்தனார். நேற்று மனைவி, பிள்ளைகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் திடீரென உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து வாசுதேவன் கூறுகையில், எங்கள் கிராமத்தில் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக கோயில் இல்லை. நான், கிருஷ்ணமூர்த்தி, ராமநாதன், அஞ்சாபுலி, கலியமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து கோயில் கட்டுவதற்காக அதன் வேலையை ஆரம்பித்தோம். பின்னர் கிருஷ்ணமூர்த்தியை தலைமையாக வைத்துவிட்டு 4 பேரும் ஒதுங்கி விட்டோம்.

பின்னர் கிருஷ்ணமூர்த்தியும், ஊர் நாட்டாமைகளும் கோயில் கட்டும் பணிகளை ஆரம்பித்தனர். மக்களை திரட்டி வரி போடுவது குறித்து பேசினர். அதில் பிரச்னை ஏற்படவே மற்றொரு தரப்பினர் தனியாக முருகன் கோயில் கட்ட ஆரம்பித்தார்கள். அவர்கள் கேட்ட தொகையை கொடுத்து விட்டோம். கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுநாள் கோயில் வரவு செலவு கணக்கு கேட்ட போது எங்களை திட்டி தாக்கினர். அன்றிலிருந்து எங்களிடம் வரியும் கேட்பதில்லை, வீட்டு வாசலில் சாமியும் நிற்பதில்லை, என்றார். தொடர்ந்து போலீசார் இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடாதென்றும், ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால் வீட்டு வாசலில் சாமியை நிறுத்தாமல் சென்றதாக புகார் appeared first on Dinakaran.

Related Stories: