ஆக்ராவின் சுவாரஸ்ய சுயேச்சை; 100வது தேர்தலை நோக்கி ஹனுஸ்ராம் அம்பேத்காரி

ஆக்ரா: தேர்தல் வந்தாலே பல விநோதமான சுயேச்சை வேட்பாளர்களுக்கு பஞ்சமிருக்காது. அந்த வரிசையில் ஆக்ராவின் ஹனுஸ்ராம் அம்பேத்காரியும் மக்களை கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவராக இருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் கேராகர் தாலுகாவைச் சேர்ந்தவர் ஹனுஸ்ராம் அம்பேகத்காரி. அம்பேத்கரின் தீவிர ஆதரவான இவர் 1985ம் ஆண்டு முதல் இதுவரை 98 முறை தேர்தலில் போட்டியிட்டு அனைத்து முறையும் தோல்வியை சந்தித்துள்ளார். ஆனால் இன்னமும் மனம் தளராமல் இம்முறை வரும் மக்களவை தேர்தலில் ஆக்ரா மற்றம் பதேப்பூர் சிக்ரி ஆகிய 2 இடங்களில் போட்டியிட்டு, 100வது தேர்தலை சந்திக்க உள்ளார்.

இது குறித்து ஹனுஸ்ராம் கூறியிருப்பதாவது:
கடந்த 1984ம் ஆண்டு, ஆக்ரா தாலுகாவில் சர்வேயராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து கேராகர் தொகுதியில் சீட் தருவதாக கூறியதால் எனது வேலையை விட்டேன். ஆனால் அவர்கள் ஏமாற்றி விட்டனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ‘‘உன் பொண்டாட்டி கூட உனக்கு ஓட்டு போட மாட்டா. வேறு யாருக்கு ஓட்டு போடுவாங்க?’’ என கேலி செய்தார்.

அதற்காகவே 1985 மார்ச்சில் நடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக முதல் முறையாக போட்டியிட்டேன். அதில் 3வது இடம் பிடித்தேன். அதிலிருந்து 100 தேர்தலில் போட்டியிட்டு என்னை நான் நிரூபிக்க முடிவு செய்தேன். அதன்படி, அனைத்து வகையான தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறேன். ஜனாதிபதி தேர்தலுக்கு கூட முயற்சி செய்தேன். ஆனால் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இம்முறை போட்டியிடும் 2 தொகுதியிலும் நான் தோற்பது நிச்சயம் என்றாலும் நான் எடுத்த சபதத்தை நிறைவேற்றுவது நிம்மதி அளிக்கிறது. இதற்கு பிறகு தேர்தலில் நிற்க மாட்டேன். எனக்கு என் மனைவி உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதரவும் உள்ளது. நான் 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வேலை செய்கிறேன். என் மனைவி, மகன்களும் தினக்கூலிகளாக இருக்கிறார்கள். அவர்களும் எனது பேரன்களும் கூட எனக்காக வாக்கு சேகரிப்பார்கள் என்றார்.

The post ஆக்ராவின் சுவாரஸ்ய சுயேச்சை; 100வது தேர்தலை நோக்கி ஹனுஸ்ராம் அம்பேத்காரி appeared first on Dinakaran.

Related Stories: