அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளுக்கான பயிற்சியை அந்தந்த பகுதிகளில் நடத்த வலியுறுத்தல்

கூடலூர்,ஏப்.14: வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஏராளமான அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இப்பணிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் அதிகாரிகளால் அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகளுக்காக கூடலூர் பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் குன்னூர் மற்றும் ஊட்டி பகுதிக்கு அழைக்கப்படுவதும், அங்குள்ளவர்கள் கூடலூர் பகுதிக்கும் வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.

இதற்காக கூடலூர்,பந்தலூர் பகுதிகளிலிருந்து 500க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குன்னூர்,ஊட்டி பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. அதேபோல் அங்கிருந்தும் அதே எண்ணிக்கையிலான ஆசிரியர்கள்,ஊழியர்கள் கூடலூருக்கு வர வேண்டி உள்ளது.

தற்போது தேர்தல் நடைபெறும் நேரத்தில் பண்டிகைகள் நடைபெறுவதாலும், விடுமுறைகள் காரணமாகவும் தமிழகம், கேரளம்,கர்நாடகம் ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணங்களும் தாமதமாகின்றன. இதற்கிடையே தேர்தல் பயிற்சிகளுக்காக இருபுறமும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயணிப்பதால் அதிக வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு காலதாமதமும் ஏற்படுகிறது. இது போன்ற பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொண்டு தேர்தல் பணிகளுக்கான பயிற்சிகளை அந்தந்த பகுதியிலேயே வழங்கவும், தேர்தல் பணிகளின்போது வழக்கமான நடைமுறைப்படி பணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளுக்கான பயிற்சியை அந்தந்த பகுதிகளில் நடத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: