பண்ருட்டி அருகே நடந்த வாகன சோதனையில் ₹62 ஆயிரம் பறிமுதல்

பண்ருட்டி, ஏப். 11: தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பண்ருட்டியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் பண்ருட்டி கடலூர் சாலையில் நரிமேடு அருகே பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், போலீசார் ராஜசேகர், சுரேஷ் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.62 ஆயிரம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுவை மணவெளியை சேர்ந்த கோபிநாத் என்பதும், இந்த தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பறக்கும் படையினர் ரூ.62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பண்ருட்டி தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

The post பண்ருட்டி அருகே நடந்த வாகன சோதனையில் ₹62 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: