பாஜவால் ஏற்படுத்தப்பட்ட வேலையில்லா திண்டாட்டமே நாட்டின் மிகப்பெரிய பிரச்னை: கார்கே கடும் தாக்கு

புதுடெல்லி: ‘பாஜவால் ஏற்படுத்தப்பட்ட வேலையில்லா திண்டாட்டமே மக்களவை தேர்தலில் மிகப்பெரிய பிரச்னையாக எதிரொலிக்கிறது’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜவால் ஏற்படுத்தப்பட்ட வேலையில்லா திண்டாட்டம்தான் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் மிகப்பெரிய பிரச்னை. நமது இளைஞர்கள் வேலை கிடைக்காமல் போராடுகிறார்கள்.

வேலை தேடுவோர் எண்ணிக்கையில் அதிகமானோர் சேரும் நிலையில், அவர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்களில் படிக்கும் மாணவர்களுக்கே வேலை கிடைப்பதில்லை. 12 ஐஐடிகளில் சுமார் 30% மாணவர்கள் வழக்கமான பிளேஸ்மென்ட்களை பெறவில்லை. 21 ஐஐஎம்களில் 20% மட்டுமே பகுதிநேர வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். ஐஐடி மற்றும் ஐஐஎம்களிலேயே இந்த நிலை என்றால், நாடு முழுவதும் உள்ள நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜ எவ்வாறு அழித்துள்ளது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

மோடி அரசின் கீழ் வேலையின்மை விகிதம் 2014ல் இருந்ததை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) சமீபத்திய அறிக்கையில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70-80 லட்சம் இளைஞர்கள் வேலை தேடுவோர் எண்ணிக்கையில் இணைகின்றனர். ஆனால் 2012 முதல் 2019 வரையிலும், வேலை வாய்ப்பு உருவாக்கம் கிட்டத்தட்ட பூஜ்ஜிய வளர்ச்சி, அதாவது வெறும் 0.01% மட்டுமே.

மோடி அளித்த ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, நமது இளைஞர்களின் கெட்ட கனவாகி விட்டது. எனவே, காங்கிரஸ் கட்சி, இளைஞர்களுக்கு பல்வேறு உத்தரவாதங்களை வழங்கி உள்ளது. 25 வயதிற்குட்பட்ட எந்தவொரு டிப்ளமோ அல்லது பட்டதாரியும், இனி வேலை பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெற்றிருப்பதோடு, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் ஊதியம் பெற வேண்டும். இது வேலை மற்றும் கற்றலுக்கான தடைகளை நீக்கி, தொழில் வளர்ச்சிக்கான புதிய வழிகளை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post பாஜவால் ஏற்படுத்தப்பட்ட வேலையில்லா திண்டாட்டமே நாட்டின் மிகப்பெரிய பிரச்னை: கார்கே கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: