திமுக, அதிமுக, பாமக மோதும் தர்மபுரி மக்களவை தொகுதி கள நிலவரம்

சங்க காலத்தில் ஒளவையாரால் பாராட்டப்பட்ட அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னன் தகடூரை ஆண்டு வந்தார். தகடூர் என்ற பெயர் இரண்டு தமிழ் சொற்களில் இருந்து உருவானது. ‘தகடு’ அதாவது இரும்பு என்று பொருள், மற்றும் ‘ஊர்’ அதாவது இடம் என பொருள்படும். இந்த தகடூர் தான் பிற்காலத்தில் தர்மபுரி என மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளில் 10 பொதுத்தொகுதியில் தருமபுரியும் ஒன்று. கடந்த 2008ல் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை அரூர் (தனி), மொரப்பூர், தர்மபுரி, பென்னாகரம், மேட்டூர், தாரமங்கலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்புக்கு பின், பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) மற்றும் மேட்டூர் ஆகிய தொகுதிகள் இணைக்கப்பட்டன. தருமபுரிக்கு வரலாறு சிறப்புற அமைந்தபோதும் இன்றைய நிலையிலும் கிராமப்புறங்கள் அதிகம் கொண்டுள்ள இந்த தொகுதி வளர்ச்சியும், பொருளாதார சூழலும் அதிகம் தேவைப்படக்கூடிய தொகுதியாக தான் பார்க்க முடிகிறது.

இத்தனைக்கும் டெல்டா மாவட்டங்களை வளப்படுத்தும் காவிரி ஆறு தர்மபுரி வழியாக தான் தடம் பதித்து பாய்ந்தோடுகிறது. விவசாயம் மட்டுமே ஒரே தொழிலாக இங்கு இருப்பதால் கரும்பு, தக்காளி, கேழ்வரகு, மாம்பழம், மரவள்ளி கிழங்கு ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும், அரூர், பாலக்கோடு பகுதியில் ரசயான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதுதவிர, கல்வியில் முன்னேற்றமடைந்த தொகுதியாக இருந்தாலும் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இல்லாத காரணத்தால் படித்த 3 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் பிழைப்புக்காக சென்னை, சேலம், திருப்பூர், கோவை, பெங்கரூரு போன்ற நகரங்களுக்கு படையெடுக்கும் நிலையில் தான் தற்போது உள்ளது. அதேபோல், தமிழகத்தில் தேர்தலில் சாதி அதிகம் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாக தர்மபுரி இருந்து வருகிறது. அதன்படி, வன்னியர் சமூக மக்கள் 35 சதவீதமும், ஆதிதிராவிடர் சமூகத்தினர் 25 சதவீதமும், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் 15 சதவீதமும் மற்ற சமூகங்களை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடி மக்களும் கணிசமாக உள்ளனர். அரசியல் வெற்றிகளை பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதி இது. கூட்டணி பலத்தை தாண்டி தனிப்பட்ட முறையில் செல்வாக்குடன் இருப்பதால் வெற்றி அல்லது இரண்டாவது இடத்தை தொடர்ந்து கைப்பற்றி வருகின்றது.

அதன்படி, இதுவரை நடந்த தேர்தல்களில் பாமக 4 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அந்தவகையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அசோகன், திமுக சார்பில் மணி, பாமக சார்பில் சவுமியா அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் தொழில் வளர்ச்சிக்கான தேசிய நெடுஞ்சாலை, ரயில் பாதை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அமைந்துள்ளன. இருப்பினும் அடிப்படை வளங்கள் தேவையான அளவில் பயன்படுத்தப்படவில்லை. அதேபோல் இந்த தொகுதியில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தொழிற்சாலைகளை அமைப்பதிலும் ஒன்றிய – மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் களம் காண்கின்றனர். இந்த கட்சி தலைவர்களின் தேர்தல் பரப்புரையால் தற்போது தொகுதியில் கடும் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post திமுக, அதிமுக, பாமக மோதும் தர்மபுரி மக்களவை தொகுதி கள நிலவரம் appeared first on Dinakaran.

Related Stories: