ஒடிசாவில் தமிழர் மூலம் கொள்ளை நடக்கிறது: ஸ்மிருதி இரானி சர்ச்சை பேச்சு

புவனேஷ்வர்: தமிழ்நாட்டை சேர்ந்தவரின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒடிசாவின் வளங்களை கொள்ளையடிக்ப்படுவதாக ஸ்மிருதி இரானி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவின் 21 மக்களவை தொகுதிகளில் ஏற்கனவே 15 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப் பதிவு முடிவடைந்து விட்டது. மீதமுள்ள 6 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜகத்சிங்பூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட குஜாங்கில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ஸ்மிருதி இரானி, “ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு தன்னை வௌிப்படுத்தி கொள்ளவும், மற்றவர்களை சந்திக்கவும் சுதந்திரம் இல்லை என்று பேசப்படுகிறது. பிஜூ ஜனதா தளத்தின் முழு தலைமையும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி வாக்குப் பதிவின்போது அனைவரும் தாமரை சின்ன பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒடிசாவின் எதிர்காலத்தை சிறையில் இருந்து விடுவிக்க முடியும். பிஜூ ஜனதா தள தலைவர்கள் ரூ.32,000 கோடி சிட்ஃபண்ட் ஊழல், ரூ.60,000 கோடி சுரங்க ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலத்தில் ஆளும் கட்சி ஊழல் செய்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது. இதை ஒடிசா மக்கள் எவ்வளவு காலம் தாங்குவார்கள்?. பிஜூ ஜனதா தளம் ஆட்சியில் நிலம், நிலக்கரி, மணல் மற்றும் சுரங்க மாபியாக்களை வளர்த்து வருகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆதரவாளர்கள் தமிழ்நாட்டை ேசர்ந்தவரின் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஒடிசாவின் வளங்களை கொள்ளை அடிக்க இடைவிடாமல் உழைத்து வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டை சேர்ந்த ஒடிசா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனை குறிவைத்து ஸ்மிருதி இரானி பேசியுள்ளாார்.

The post ஒடிசாவில் தமிழர் மூலம் கொள்ளை நடக்கிறது: ஸ்மிருதி இரானி சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: