நாக்பூர் தொகுதியில் போட்டியிடும் நிதின் கட்கரியை தோற்கடிக்க மோடி, அமித் ஷா தீவிர முயற்சி: சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்

மும்பை: நாக்பூர் தொகுதி வேட்பாளரான பாஜ மூத்த தலைவர் நிதின் கட்கரியை தோற்கடிக்க பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்நவிஸ் ஆகியோர் தீவிர முயற்சி செய்வதாக சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜ மூத்த தலைவரும் ஒன்றிய அமைச்சருமான நிதின் கட்கரி, நாக்பூர் மக்களவை தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இம்முறை களமிறங்கி உள்ளார். இந்நிலையில், சிவசேனா கட்சியின் ‘சாம்னா’ பத்திரிகையில், அக்கட்சி எம்பி சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: இம்முறை நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரியை தோற்கடிக்க பிரதமர் மோடி, அமித்ஷா, பட்நவிஸ் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். கட்கரி வீழ்த்துவது முடியாத காரியம் என்பதை அறிந்த பட்நவிஸ் விருப்பமே இல்லாமல் அவருக்காக பிரசாரம் செய்தார். கட்கரியை தோற்கடிக்க பட்நவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு உதவுவதாக ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

இன்னொருபுறம், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தொகுதிக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை வாரி இறைக்கிறார். இந்த மக்களவை தேர்தலில் மீண்டும் மோடி-அமித்ஷா அரசு அமைந்தால், உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியிலிருந்து நீக்கப்படுவார். இவ்வாறு ராவத் கூறி உள்ளார். மோடி-கட்கரி இடையேயான உறவு சரியில்லாத நிலையில், பாஜ வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் கட்கரி பெயர் இடம் பெறவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைத்த பிறகு கட்கரி பெயர் 2ம் பட்டியலில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ராவத்தின் குற்றச்சாட்டை பாஜ மாநில தலைவர் பவான்குலே மறுத்துள்ளார்.

 

The post நாக்பூர் தொகுதியில் போட்டியிடும் நிதின் கட்கரியை தோற்கடிக்க மோடி, அமித் ஷா தீவிர முயற்சி: சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: