சேலத்தில் ஓடும் ரயிலில் 350 சவரன் நகை கொள்ளை: கேரளாவிலிருந்து சென்னை வந்தபோது திருட்டு; வடமாநில கொள்ளையர் கைவரிசை?

சேலம்: சேலம் வழியே சென்னை வந்த ரயிலில் கேரளா நகை வியாபாரியிடம் 350 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கேரளா மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள சர்வலூரை சேர்ந்தவர் கிக்‌சன் (47). இவர், அந்த பகுதியில் சொந்தமாக தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். இவர், தமிழ்நாட்டில் உள்ள பிரபல நகைக்கடைகளில் ஆர்டர் பெற்று நகை செய்து வழங்கி வருகிறார். அதன்படி, சென்னையில் செயல்படும் பிரபல நகைக்கடை நிறுவனத்தினர் 2.8 கிலோ தங்கத்தை கொடுத்து தங்க நகை செய்து தர ஆர்டர் கொடுத்தனர்.

இதையடுத்து பல்வேறு டிசைன்களில் செய்த 350 சவரன் தங்க நகையை (2.8 கிலோ) செய்து முடித்துள்ளார். அதனை டெலிவரி செய்ய கடந்த 26ம் தேதி இரவு கிக்சன், திருச்சூரில் இருந்து திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டுள்ளார். எஸ்-1 முன்பதிவு பெட்டியில் ஏறிய கிக்சன், யாரும் வராததால் 63ம் எண் கொண்ட சீட்டில் இருந்து வந்துள்ளார். 27ம் தேதி அதிகாலை 5 மணியளவில் கிக்சன் கண் விழித்து பார்த்தபோது, ரயில் சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நின்றுள்ளது. அப்போது அவர் 2.8 கிலோ நகை வைத்திருந்த பேக்கை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

உடனே அந்த பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் தான் கொண்டு வந்த 2.8 கிலோ நகை கொள்ளை போனது பற்றி தெரிவித்தார். அதற்குள் ரயில் புறப்பட்டு ஜோலார்பேட்டை நோக்கி சென்றது. ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றதும் நகை வியாபாரி கிக்சன் இறங்கி, மீண்டும் சேலம் வந்து ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் வட மாநிலத்தவர்கள் கை வரிசை இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சேலத்தில் ஓடும் ரயிலில் 350 சவரன் நகை கொள்ளை: கேரளாவிலிருந்து சென்னை வந்தபோது திருட்டு; வடமாநில கொள்ளையர் கைவரிசை? appeared first on Dinakaran.

Related Stories: