நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சட்டமன்ற தொகுதிகளில் 106 பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ‘பிளான்’

*127 நுண் பார்வையாளர்கள் தயார்

ஊட்டி : நீலகிரி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் உள்ள 106 பதற்றமான வாக்குசாவடிகளில் 127 நுண் பார்வையாளர்கள் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் 689 வாக்குச்சாவடிகள் உள்ளது.

இதில், ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 19 வாக்குச்சாவடிகளும், கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 56 வாக்குச்சாவடிகளும், குன்னூர் சட்டமன்ற தொகுதிகளில் 31 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 106 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை 106 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 20 சதவீதம் என 127 நுண்பார்வையாளர்களாக பணியில் ஈடுபடுவார்கள். நுண் பார்வையாளர்களாக பாஸ்டியூர் இன்ஸ்டிடியூட் சார்ந்த அலுவலர்கள், வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள், தேயிலை வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் எல்ஐசி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண் பார்வையாளர்கள் தேர்தல் நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்து பயிற்சி கூட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பரார், தலைமை வகித்து பேசியதாவது: நுண் பார்வையாளர்களாகிய நீங்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, அதனை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, வாக்குப்பதிவு நாளில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நல்ல முறையில் எந்தவொரு சந்தேகமுமின்றி மேற்கொள்ளும் வகையில் தங்களை தாங்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதற்காகதான் இந்த பயிற்சி வகுப்புகள் தங்களுக்கு அளிக்கப்படுகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணிகளை நேர்த்தியாகவும், சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில் நுண்பார்வையாளர்களுக்கு என 3 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதன்படி, ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார், கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு பாரத வங்கி மேலாளர் ரமேஷ்குமார், குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு தேயிலை வாரிய உதவி இயக்குனர் செல்வம் ஆகியோர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சட்டமன்ற தொகுதிகளில் 106 பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ‘பிளான்’ appeared first on Dinakaran.

Related Stories: