ஜோலார்பேட்டை அருகே குடியான குப்பத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்: ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குடியான குப்பம், பச்சூர், சோமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஆனது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு முழுமை பெறாமல் ஆமை வேகத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் ஆங்காங்கே உள்ள ரயில்வே தண்டவாள பாதையை பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆபத்தான முறையில் கடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே துறை மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ரயில்வே மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அடிக்கடி தினகரனில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து பச்சூர், சோமநாயக்கன்பட்டி, குடியானகுப்பம் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணியை ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த குடியான குப்பம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளும், ரயில்வே அண்டர் பிரிட்ஜ் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளுக்காக அனைத்துவித இரும்பு தளவாடங்கள் இறக்கப்பட்டு கம்பி கட்டுதல், காங்கிரட் அமைத்தல், வாகனங்கள் செல்ல மாற்று சாலை ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு ராட்சத பாலம் அந்தரத்தில் அமர்த்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக பாலங்கள் அமைக்க தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த துறை அதிகாரிகளின் தொடர் தீவிர பணியால் வருட கணக்கில் நடைபெற்று வந்த மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது புத்துயிர் பெற்று தீவிரமாக நடைபெற்று வருவதால் அடுத்த ஆண்டில் அனைத்து பணிகளும் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஜோலார்பேட்டை அருகே குடியான குப்பத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்: ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: