வறட்சியால் கருகி வரும் மிளகாய் செடிகள்

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.2: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் வறட்சியால், சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கருகி வரும் மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி செடிகளை காப்பாற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளாக செங்குடி, பூலான்குடி, வாணியக்குடி, வண்டல், வரவணி, சேத்திடல், சீனாங்குடி அடவிலங்கான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த தொடர்மழையால், மிளகாய் செடிகள் பெரிதும் பாதிப்படைந்து அழுகி நாசமானதை தொடர்ந்து, மீண்டும் விவசாயிகள் மிளகாய் செடிகளை நடவு செய்து பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வெயிலால் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகள் வெப்பத்திற்கும், வறட்சிக்கும் தாக்கு பிடிக்க முடியாமல், செடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்கள் பயிரிட்டுள்ள மிளகாய் செடிகளை காப்பாற்றும் விதமாக கண்மாய், குளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை, வயல்களுக்கு பாய்ச்சி, மிளகாய் செடிகளை காப்பாற்றும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் பாசன வசதி இல்லாத பெரும்பாலான பகுதிகளில் உள்ள மிளகாய் செடிகள் கருகி வரும் நிலையில் இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் வரை மகசூல் தர வேண்டிய மிளகாய் செடிகள் இப்பொழுதே முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் ஏராளமாக பணம் செலவு செய்த விவசாயிகளுக்கு செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியவில்லையே என மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

The post வறட்சியால் கருகி வரும் மிளகாய் செடிகள் appeared first on Dinakaran.

Related Stories: