சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோடியின் ஏவல்துறையாக செயல்படுகிறது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

கருங்கல், மார்ச் 30: தேர்தல் ஆணையம் மோடியின் ஏவல்துறையாக செயல்படுகிறது என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ குற்றம் சாட்டினார். குமரி மாவட்டம் கருங்கலில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியது: இந்தியாவில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே முதற்கட்டமாக தேர்தல் நடக்கும் என அறிந்து 5 முறை தமிழகத்திற்கு சுற்றுபயணம் செய்தார் மோடி. இதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அமலாக்கதுறை, தேர்தல் ஆணையம் உட்பட அனைத்து துறைகளும் மோடியின் ஏவல்துறையாக உள்ளன. தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் ஜனநாயக கடமையாற்ற கூடியதாக இருக்க வேண்டும் .ஆனால் தேர்தல் ஆணையர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதுவும் ஒரு உதாரணமாக உள்ளது. இதை கண்டிக்கிறேன்.

காங்கிரஸ் என்பது சமூக பாகுபாடற்ற மதசார்பற்ற கட்சி. ஆகையால் எங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் விளவங்கோடு தொகுதியில் நிச்சயமாக வெல்வார். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் காங்கிரஸ் கொண்டு வந்த பெண்களுக்கான மகளிர் இடை ஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும். நண்பர்கள் செலவில் வாழ்க்கை நடத்துவதாக கூறிய அண்ணாமலையின் தேர்தல் வேட்புமனுவில், அவரது சொத்து விவரம் தெரிய வந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது அவர் கூறிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் பெற்ற குழந்தைக்கு பாஜக பாலூட்டி வளர்த்து வருவதாக சீமான் குற்றச்சாட்டுவது குறித்து கேட்ட போது, சீமான் ஒவ்வொரு நேரம் ஒவ்வொருவிதமாக பேசி வருகிறார். அவர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வேறு, தற்போது பாஜக அரசு செயல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி வேறு. அதே போன்று நீட் தேர்வு எந்தெந்த மாநிலங்களுக்கு தேவையோ அந்தந்த மாநிலங்கள் எடுத்து கொள்ளலாம் என்றுதான் கொண்டு வந்தோம் என கூறினார்.

The post சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோடியின் ஏவல்துறையாக செயல்படுகிறது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: