முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: நாடாளுமன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடினர்

சேலம்: சேலத்தில் ஓட்டலில் தங்கியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பேசினார். பின்னர், இரவு சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார்.

இதனிடையே, நேற்று முன்தினம் ஈரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், சேலத்தில் முதலமைச்சர் ஓய்வெடுத்த அதே ஓட்டலில் தங்கினார். நேற்று காலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இருவரும் 10 நிமிடம் கலந்துரையாடினர். பின்னர், சேலத்தில் இருந்து கிளம்பிய கமல்ஹாசன், விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். இதேபோல், ஓட்டலில் தங்கியிருந்த முதல்வரை, சேலத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

* ‘ஜூன் 4ல் புதிய இந்தியா’ கமல் ‘எக்ஸ் தள’ பதிவு
சேலத்தில் முதல்வரை சந்தித்தது குறித்து கமல் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஈரோடு பிரசாரத்தின் போது, இனிய நண்பர், திமுக தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு கலந்துரையாடினேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆற்ற வேண்டிய காரியங்களை பற்றி, இருவரும் பேசிக்கொண்டோம். ஜூன் 4ம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும், பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டோம்,’’ என்று தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: நாடாளுமன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடினர் appeared first on Dinakaran.

Related Stories: