ஆ.ராசாவின் காரை சோதனையிட்ட பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை: ஆ. ராசாவின் காரை சோதனையிட்ட பறக்கும் படை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். கடந்த 25ம் தேதி நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா முறையாக பரிசோதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. விசாரணையில் முறையாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரி கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்ட அறிக்கை: நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை குன்னூர்-கேரளா எல்லை அருகே உள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் முறையாக சோதனை செய்யவில்லை என்று செய்திகள் வெளியாகின. இதன் அடிப்படையில் நீலகிரி தேர்தல் அதிகாரி மற்றும் செலவினப் பார்வையாளர் நடத்திய விசாரணையில், குளறுபடிகள் கண்டறியப்பட்டதால், பறக்கும் படை குழுவின் தலைவர் கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முழு சோதனை குழுவும் மாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடத்திய செலவினப் பார்வையாளர், செலவின வீடியோ கண்காணிப்பு குழுக்கள் பதிவு செய்த இரண்டு வீடியோக்களையும் பார்வையிட்டனர்.

பத்திரிகைகளில் வெளியான வீடியோ மற்றும் விஎஸ்டி வீடியோக்கள் இரண்டிலும் சாதாரணமாக, மேலோட்டமாக சோதனை செய்யப்பட்டுள்ளதை காட்டுகின்றன. மேலும் உடன் இருந்த மற்ற கார்கள் சோதனை செய்யப்படவில்லை. ஒரு முக்கிய வேட்பாளரிடம் இது போன்ற அணுகுமுறையை ஆணையம் தீவிரமாகக் கவனித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதில் சம நிலைக்காக தேர்தல் ஆணையம் வழங்கிய நடத்தை விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆ.ராசாவின் காரை சோதனையிட்ட பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: