ஆர்சிபி 182 ரன் குவிப்பு: 83 ரன் விளாசினார் கோஹ்லி

பெங்களூரு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. தொடக்க வீரர் விராத் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 83 ரன் விளாசினார். எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆர்சிபி தொடக்க வீரர்களாக விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். டு பிளெஸ்ஸி 8 ரன் மட்டுமே எடுத்து ராணா பந்துவீச்சில் ஸ்டார்க் வசம் பிடிபட்டார்.

கோஹ்லி – கிரீன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தனர். கிரீன் 33 ரன் (21 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து கோஹ்லி – மேக்ஸ்வெல் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது. மேக்ஸ்வெல் 28 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சுனில் நரைன் சுழலில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி அரை சதம் அடித்து அசத்தினார்.

ரஜத் பத்திதார், அனுஜ் ராவத் தலா 3 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் – கோஹ்லி ஜோடி அதிரடியில் இறங்க, ஆர்சிபி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கார்த்திக் 20 ரன் (8 பந்து, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டானார். ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. கோஹ்லி 83 ரன்னுடன் (59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல் தலா 2, சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது.

The post ஆர்சிபி 182 ரன் குவிப்பு: 83 ரன் விளாசினார் கோஹ்லி appeared first on Dinakaran.

Related Stories: