ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது கொல்கத்தா அணி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா அணி தகுதி பெற்றது. இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி தகுதி பெற்றது.

17-வது ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக இந்த போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானாவின் அதிரடியால் 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் பும்ரா, சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். ஒரு முனையில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாட ரோகித் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடி இஷான் கிஷன் 22 பந்தில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய ரோகித் 24 பந்துகளில் 19 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 11, பாண்ட்யா 2, டிம் டேவிட் 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மும்பை அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரஸல், ஹர்சித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

The post ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது கொல்கத்தா அணி appeared first on Dinakaran.

Related Stories: