பிரதமர் அடிக்கல் நாட்டியும் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பால பணிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி


சிவகாசி: பிரதமர் நரேந்திர மோடி காணொளியில் அடிக்கல் நாட்டிய பின்னர் ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள், பயணிகள் அதிருப்தியில் உள்ளனர். மதுரை – செங்கோட்டை அகல ரயில் பாதையில் சிவகாசி வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை-குருவாயூர், செங்கோட்டை-மயிலாடுதுறை, சென்னை-கொல்லம், மதுரை-செங்கோட்டை, சிலம்பு எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்- வேளாங்கண்ணி, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அகல ரயில் பாதையில் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் ரயில்வே கிராசிங், சிவகாசி-திருவில்லிபுத்தூர் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் ஆகியவற்றில் மேம்பாலம் இல்லாததால் ரயில்வே கேட் மூடப்படும் போது இரு புறங்களிலும் 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் நிற்கின்றன.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் ரயில் சென்ற பின் போக்குவரத்து சீராக 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் சிவகாசி, திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க 2021ல் ஒப்புதல் வழங்கப்பட்டது. சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தொடங்கப்படவில்லை. சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சாட்சியாபுரத்தில் மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு, தெற்கு ரயில்வே சார்பில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது.

சிவகாசி இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் வரை ரூ.60 கோடி மதிப்பில் 700 மீட்டர் நீளம், 12 அகலத்தில் சுரங்கப்பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதேவேளையில், திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் விருதுநகர் – தென்காசி இடையிலான ரயில் பாதையில் திருத்தங்கல் கிராசிங்(424), சிவகாசி சாட்சியாபுரம் கிராசிங் (427) ஆகியவற்றில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு கடந்த மாதம் 26ம் தேதி பிரதமர் மோடி, ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் மேம்பாலம் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் சென்றுவரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், “தேர்தலுக்கு முன்பாக பிரதமர் அடிக்கல் நாட்டி வைத்ததால் ரயில்வே மேம்பால பணிகள் உடனடியாக தொடங்கி நடைபெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்னமும் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த இரண்டு கிராசிங்குகளிலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். தற்போது தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் தொடங்கப்பட்ட திட்டங்களை தொடரலாம் என்ற நிலையிலும் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது. எனவே சிவகாசி, திருத்தங்கல்லில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post பிரதமர் அடிக்கல் நாட்டியும் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பால பணிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: