புனித வியாழனை முன்னிட்டு தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் 12 பேரின் பாதங்கள் கழுவும் சடங்கு

 

தஞ்சாவூர், மார்ச்29: தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழனையொட்டி பன்னிரண்டு முதியவர்களின் பாதங்களை கழுவும் சடங்கு நேற்று நடைபெற்றது. மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமை வகித்தார். இயேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் தனது பன்னிரெண்டு சீடர்களுடன் அமர்ந்து இரவு உணவு உண்டதையும், தனது சீடர்களின் பாதங்களை கழுவி முத்தம் செய்து, தான் செய்ததைப்போல நீங்களும் பிறர் பாதங்களை கழுவவேண்டும் என அன்புகட்டளையிட்டார்.

இந்நாளை கிறிஸ்தவர்கள் புனித வியாழன் தினமாக அனுசரித்து வருகின்றனர். அன்றைய நாளில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், திருப்பலி, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை ஆராதனை நடைபெறும். இந்நிலையில் தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் நேற்று புனித வியாழன் வழிபாடு நடைபெற்றது.

மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமை வகித்து 12 முதியவர்களின் பாதங்களை கழுவினார். தொடர்ந்து இறையுரை, கூட்டுபாடல் திருப்பலி, நற்கருணை பவனி நடைபெற்றது. இவ்வழிபாட்டு நிகழ்ச்சியில் பேராலய பங்குதந்தை பிரபாகர், உதவி பங்கு தந்தை பிரவீன், திருதொண்டர் அன்புராஜா, ஆயரின் செயலர் ஆன்ரூ செல்லகுமார் மற்றும் குருக்கள், கன்னியர்கள் கலந்து கொண்டனர்.

The post புனித வியாழனை முன்னிட்டு தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் 12 பேரின் பாதங்கள் கழுவும் சடங்கு appeared first on Dinakaran.

Related Stories: