உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த அரசு பஸ்: டிரைவரின் முயற்சியால் தப்பியது

உசிலம்பட்டி, மார்ச் 29: திருமங்கலத்திலிருந்து நேற்று பயணிகளுடன் உசிலம்பட்டி நோக்கி அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இந்த பஸ் உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டி பகுதியில் வந்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக சாலையோரம் ஒதுங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்டு உள்ள பள்ளத்திற்குள் திடீரென சரிந்தது. இதனை உணர்ந்த பஸ் டிரைவர் ராஜேந்திரன் சாமர்த்தியமாக பேருந்து முழுவதும் சாய்ந்துவிடாமல் உடனடியாக அதனை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு, பள்ளத்தில் சரிந்திருந்த அரசு டவுன் பஸ் வெளியே கொண்டுவரப்பட்டது. பின்னர் அது அங்கிருந்து புறப்பட்டு சென்றது. விபத்தில் சிக்கிய அரசு டவுன் பஸ்சில் அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் இருந்தனர். பஸ் பள்ளத்தில் கவிழாமல் நிறுத்திய டிரைவரை அவர்கள் அனைவரும் பாராட்டினர்.

The post உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த அரசு பஸ்: டிரைவரின் முயற்சியால் தப்பியது appeared first on Dinakaran.

Related Stories: