ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை : ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர். பின்னர், அண்ணன் வைகோ அவர்களுடன் இணைந்து பயணப்பட்டார்.

ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் ம.தி.மு.க. தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈரோடு தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தி இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடல் சொந்த ஊரான குமாரவலசிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்கு நடைபெறுகிறது. மதிமுக.தொடங்கப்பட்டதில் இருந்து ஈரோடு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கணேசமூர்த்தி, மதிமுகவின் பொருளாளராகவும் இருந்துள்ளார். இதுவரை மூன்று முறை எம்.பி. மற்றும் ஒருமுறை எம்எல்ஏ-வாக பதவி வகித்துள்ளார்.

The post ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: