வாக்காளர்களுக்கு வழங்க ரூ.15 லட்சம் சேலைகள் பதுக்கல் அதிமுக கோடீஸ்வர வேட்பாளர் மீது வழக்கு

ஈரோடு: வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க ரூ.15 லட்சம் மதிப்பிலான 24,150 சேலைகளை பதுக்கி வைத்திருந்த ஈரோடு தொகுதி அதிமுக கோடீஸ்வர வேட்பாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சிவிஜில் செயலியில் ஒரு புகார் வந்தது. அதில், ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையம் கவுந்தப்பாடி சாலை அண்ணா நகர் வீதியில் ஒரு கட்டிடத்தில் உரிய ஆவணங்களின்றி பண்டல் பண்டலாக சேலைகள் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு இருந்த 161 பண்டல்களை கைப்பற்றி பிரித்து சோதனை செய்தனர். அதில் ஒரு பண்டலுக்கு 150 சேலைகள் வீதம் 161 பண்டல்களில் மொத்தம் 24 ஆயிரத்து 150 சேலைகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கட்டிட உரிமையாளரான காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரனை பிடித்து விசாரித்தபோது, கடந்த 20 நாட்களுக்கு முன் ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் என்பவர் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு பரிசாக கொடுப்பதற்கு இந்த சேலைகளை வாங்கி கொடுத்தார். அதனை லாரியில் ஏற்றி வந்து இங்கு இறக்கி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க சேலைகளை பதுக்கி வைத்திருந்ததாக அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், கட்டிட உரிமையாளரான ரவிச்சந்திரன், ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் ஆகிய 3 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடோனில் பதுக்கி இருந்த 161 பண்டல்களில் இருந்த 24,150 சேலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது. அதிமுக வேட்பாளர் அசோக்குமார்தான் தமிழ்நாட்டில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர். இவரின் சொத்து மதிப்பு ரூ.653 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

* ‘சொத்துக்களின் பெருமளவை மக்களுக்காக செலவு செய்வேன்’
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் கூடுதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் ஆற்றல் அசோக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது சொத்து பட்டியல் குறித்து வேட்பு மனுவில் பட்டியலிட்டு காண்பித்து உள்ளேன். தற்போது எனது சொத்து விவரம் பெரிய பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த சொத்துகள் திடீரென வந்தது இல்லை. கடந்த 25 ஆண்டு காலமாக கடும் உழைப்பால் பொருளாதாரத்தில் வலிமை பெற்று இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனது சொத்துக்களின் பெருமளவை தொகுதி மக்களுக்காக செலவு செய்வேன்’ என்றார்.

The post வாக்காளர்களுக்கு வழங்க ரூ.15 லட்சம் சேலைகள் பதுக்கல் அதிமுக கோடீஸ்வர வேட்பாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: