ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள் பேரவை தேர்தல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி

ஜம்மு: ஜம்மு – காஷ்மீரில் வரும் செப்டம்பர் மாதத்துக்கு முன் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘ஜம்மு – காஷ்மீரில் ஜனநாயகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்துக்கு முன் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசியினருக்கான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி உள்ளோம். பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடும் அறிமுகப்படுத்தப்பட்டது.

குஜ்ஜர்கள் மற்றும் பகர்வால்களுடன் பஹாடிகளுக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் 70 சதவீத பகுதிகளில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (ராணுவத்திற்கு வழங்கப்படும் அதிகாரம்) திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரமானது ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் இருக்கும் ராணுவம் வாபஸ் பெறப்பட்டு, அந்த யூனியன் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை ஜம்மு காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைக்கும் திட்டமும் உள்ளது. கடந்த காலங்களில் ஜம்மு – காஷ்மீர் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்ற பார்வை இருந்தது. ஆனால் இன்று அவர்கள் சிறப்பாக பணியாற்று கிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அங்கு வாழும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்கள். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அந்த நிலம் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை மீட்பதே ஒவ்வொரு இந்தியர்கள் மற்றும் அனைத்து காஷ்மீரிகளின் குறிக்கோளாகும்’ என்று கூறினார்.

The post ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள் பேரவை தேர்தல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: