கோம்பை பகுதியில் பருத்தி விவசாய பரப்பு குறைந்தது

தேவாரம், மார்ச் 27: கோம் பை பகுதியில், பருத்தி விவசாய பரப்பு குறைந்து வருகிறது. உத்தமபாளையம் வட்டாரத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இதில் பண்ணைப்புரம் பகுதியில் மட்டும் சுமார் 100 ஏக்கர் வரை பருத்தி விவசாயம் நடந்தது.

ஆனால் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், வெப்பநிலை அதிகரித்ததாலும், பருவமழை சரியான பருவத்தில் கிடைக்காததாலும் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் பருத்தி சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர். நடப்பு பருவத்தில் கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் இருந்த போதும் பருத்தி சாகுபடிக்கு விவசாயிகள் திரும்பவில்லை. பருத்தி சாகுபடி மேற்கொள்ள தயக்கத்துடனேயே உள்ளனர்.

பருத்தி சாகுபடிக்கு போதுமான தண்ணீர் அவசியம் என்பதால் பருவமழையை நம்பி பயிர் செய்ய விவசாயிகளிடம் தயக்கம் உள்ளது. தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கோடை மழை, பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து விவசாயிகளுக்கு தகவல்களை அளித்து பருத்தி சாகுபடி மேற்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post கோம்பை பகுதியில் பருத்தி விவசாய பரப்பு குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: