குட்கா பொருட்களை பேருந்தில் கடத்தியவர் கைது

திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பேருந்துகள் மூலம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானதி மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து நகரி, புத்துார், திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடு வரை செல்லும் தடம் எண் 201 என்ற தமிழக அரசுப் பேருந்தை போலீசார் சோதனை செய்தனர். அந்த பேருந்தில் சந்தேகப்படும்படியான நபரிடம் இருந்த 4 பைகளில் 25 பாக்கெட்டுகளில், ஹான்ஸ், குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து அவைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த அவர் ஆந்திர மாநிலம், பிரகாஷம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகன் சேகர் (53) என தெரிய வந்தது. சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குட்கா பொருட்களை பேருந்தில் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: