(₹4.62 லட்சம் நிதிநிறுவன ஊழியரிடம் திரும்ப ஒப்படைப்பு பேரணாம்பட்டு அருகே பறிமுதல் செய்த

குடியாத்தம், மார்ச் 26: பேரணாம்பட்டு அருகே தனியார் நிதிநிறுவன ஊழியரிடம் பறிமுதல் செய்த ₹4.62 லட்சம் நேற்று திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு குடியாத்தம்(தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி செந்தில்குமார், சிறப்பு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பேரணாம்பட்டு போலீஸ் சோதனைச்சாவடியில் கடந்த 22ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, பேரணாம்பட்டில் இருந்து ஆம்பூர் நோக்கி பைக்கில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் ₹4,62,486 ரொக்கம் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரசாத்(28) என்பதும், சென்னையில் உள்ள தனியார் நிதிநிறுவன ஊழியர் என்பதும் தெரியவந்தது.

ஆனால், அவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அதனை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து குடியாத்தம் தாலுகா அலுவலத்தில் தாசில்தார் சித்ராதேவியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான ஆவணத்தை ஆர்டிஓ சுப்புலட்சுமியிடம் நிதிநிறுவன அதிகாரிகள் வழங்கினர். மேலும், அந்த ஆவணங்கள் சரியாக இருந்ததால் பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும்படி தாசில்தாருக்கு ஆர்டிஓ பரிந்துரை செய்தார். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ₹4.62 லட்சம் ரொக்கம் நிதிநிறுவன ஊழியர் விஷ்ணுபிரசாத்திடம் நேற்று திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

The post (₹4.62 லட்சம் நிதிநிறுவன ஊழியரிடம் திரும்ப ஒப்படைப்பு பேரணாம்பட்டு அருகே பறிமுதல் செய்த appeared first on Dinakaran.

Related Stories: