வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் பணி விறுவிறு

 

விருதுநகர், மார்ச் 26: விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.19ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியானதை தொடர்ந்து தேர்தலுக்கான பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. விருதுநகர் மக்களவை தொகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ளன.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவைகளிலும் வாக்குச்சாவடிகள் செயல்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின் சப்ளை, மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சாய்வு தளம், இட வசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என்பது குறித்து ஆய்வுப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன. அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அடிப்படை வசதிகள் சுமார் 90 சதவீதம் முடிவடைந்து வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.தேர்தல் அலுவலர் ஒருவர் கூறுகையில், தேர்தல் காலத்தில் மட்டுமல்ல வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பரில் வாக்குச்சாவடிகள், வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடக்கும். வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த மக்களவை, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வாக்குச்சாடிகள் அதிகப்படுத்தப்பட்டன.

ஏற்கனவே வாக்குச்சாவடிகளாக இயங்கி வந்த இடங்கள் மற்றும் புதிய வாக்குச்சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் சில இடங்களில் சிறிய அளவிலான பணிகள் மட்டுமே உள்ளன. அவைகளும் சில நாட்களில் முடிவடைந்துவிடும் என்றார்.

The post வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் பணி விறுவிறு appeared first on Dinakaran.

Related Stories: