விருதுநகர் தேர்தல்களம் சூடுபிடித்தது காங்கிரஸ், தேமுதிக, பாஜ வேட்பாளர்கள் மனு தாக்கல்

 

விருதுநகர், மார்ச் 26: விருதுநகர் தொகுதியில் நான்கு முனை போட்டி நடைபெறும் நிலையில், காங்கிரஸ், தேமுதிக, பாஜ, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் விருதுநகர் தொகுதியின் தேர்தல் களம் விறுவிறுப்பு பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024க்கான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியானது. வேட்பு மனுக்கள் மார்ச் 20ல் துவங்கி மார்ச் 27 வரை பெறப்படுகின்றன.

சனி, ஞாயிறு தவிர்த்து 6 நாட்கள் மட்டும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் நாளான மார்ச் 20ல் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மார்ச் 21ல் தமிழக மக்கள் நலக் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் முத்துக்கண்ணு முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதன்பின் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நேற்று திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், பாஜ வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கௌசிக் என 4 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பாஜவின் வேட்பாளர் ராதிகாவிற்கு மாற்று வேட்பாளராக சரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூருடன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா சொக்கர், மதிமுக எம்எல்ஏ ரகுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுடன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேமுதிக மாவட்ட செயலாளர் காஜா செரீப், அம்மா பேரவை சேதுராமானுஜம், அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி ஆகியோரும், பாஜ வேட்பாளர் ராதிகவுடன் சரத்குமார், பாஜக மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

The post விருதுநகர் தேர்தல்களம் சூடுபிடித்தது காங்கிரஸ், தேமுதிக, பாஜ வேட்பாளர்கள் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: