ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா: பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

 

ராஜபாளையம், மார்ச் 26: ராஜபாளையம் அருகே சேத்தூரில் நடந்த பங்குனி பொங்கல் திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 8 தினங்களும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் சப்பர வீதி உலா நடைபெற்றது. மேலும் இரவில் பட்டிமன்றம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா அம்மன் தட்டு சப்பரத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது. சப்பர வீதி உலாவுக்கு முன்பாக பக்தர்கள் 10 அடி நீளமுள்ள சூலம், வேல் உள்ளிட்டவைகளை அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.

பூச்சப்பரத்தில் நடைபெற்ற அம்மன் வீதி உலாவிற்கு பிறகு, சேத்தூர், ராஜபாளையம், முகவூர், முத்துசாமிபுரம், தளவாய்புரம், கிருஷ்ணாபுரம், செட்டியார்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து அலகு குத்தியும், கரகம் சுமந்தவாறும், குழந்தைகளை ஏந்தியவாறும் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

அந்த சமயத்தில் பக்தர்கள் பூக்குழி திடலை சுற்றி நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சேத்தூர் காவல் துறையினர் மற்றும் தீ அணைப்பு துறையை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்வுக்காக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தளவாய்புரம் வழியாக மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

The post ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா: பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: