தேனி தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் மனு தாக்கல்

தேனி, மார்ச் 26: தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நாளையுடன் (27ம்தேதி) வேட்மனு தாக்கல் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் தேனி ஒன்றிய அதிமுக செயலாளர் நாராயணசாமி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேனி நகர் பங்களாமேடு வந்தார். அங்கிருந்து திறந்த வேனில் ஏறி நின்றபடி வாக்காளர்களிடம் வாக்குசேகரித்தபடி பங்களாமேட்டில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள தேனி நகர் மதுரை சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். இவருடன் முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாவட்ட செயலாளர்கள் முருக்கோடைராமர், எஸ்டிகே ஜக்கையன், அஇபாபிளாக் மாநிலத் தலைவர் பி.வி கதிரவன், தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பேரணியாக சென்றனர்.

அப்போது மதுரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலகத்திற்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்றபோது, அங்கிருந்த போலீசார் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்லலாம் என்றனர். அப்போது, முன்னாள் அமைச்சர் உதயகுமார், அதிமுக மாவட்டசெயலாளர் ஐக்கையன், முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன், வக்கீல் கிருஷ்ணகுமார் ஆகியோரை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

இதனால் அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுகவினர் கலெக்டர் அறை வரை சென்றனர். ஆனால் வேட்புமனுத்தாக்கல் செய்ய கலெக்டர் அறைக்குள் உதயகுமார், ஜக்கையன் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று வரை தேனி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர், 2 சுயேட்சைகள் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான தங்கதமிழ்செல்வன் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். நாளை மாலை தேனி நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை பேர் போட்டியிடுகின்றனர் என்ற விவரம் தெரியவரும்.

The post தேனி தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: