பங்குனி உத்திர விழா உற்சாகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 

மண்டபம்,மார்ச் 26: ராமேஸ்வரம்,தங்கச்சிமடம், இடையர்வலசை மற்றும் குயவன்குடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர உற்சவ விழா நேற்று நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் மேல கோபுர நுழைவு வாசல் பகுதியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த பழைமையான கோயிலில் 62ம் ஆண்டு பங்குனி உத்திர உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் அதிகாலையில் 2 மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்பட்டது.

அதன் பின்னர் கோயில் சார்பாக கருவறையில் அமைந்துள்ள முருகன் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள்,பால் அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாம்பன் தங்கச்சிமடம்,புதுரோடு, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்காவடி எடுத்துக் கொண்டு முருகன் சன்னதியில் பாலை செலுத்தி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சன்னதியில் பால் அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மயில் காவடி,தேர் காவடி,பறவை காவடி போன்ற காவடிகளை எடுத்து வந்து கோயிலில் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அதுபோல தங்கச்சிமடம் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலிலும் வேதாளை ஊராட்சி உட்பட்ட இடையர் வலசை பகுதியில அமைந்துள்ள முருகன் கோயிலிலும் குயவன்குடி ஊராட்சி அமைந்துள்ள முருகன் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி மற்றும் மயில் காவடி, தேர் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று தொண்டி அருகே நம்புதாளை கடற்கரை பாலமுருகன் சமோத வள்ளி, தெய்வானை கோயிலில் மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, இளநீர் உட்பட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post பங்குனி உத்திர விழா உற்சாகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: