மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்: வேளாண்துறை ஆலோசனை

 

ஆண்டிபட்டி, மார்ச் 25: மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். கோடை மழை பெய்தவுடன் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழவு செய்ய வேண்டும். இதனால் மண் இறுக்கம் மாறுவதுடன், மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. அடுத்து பெய்யும் மழையைக் கொண்டு நிலம் விதைப்பு செய்ய ஏதுவாகிறது.

மேலும், அடிமண் மேல்மட்டத்திற்கு வருவதால் மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப்புழுக்கள் மற்றும் பூஞ்சான் வித்துகளும் அழிக்கப்படுகிறது. இதனால், அடுத்து பயிரிடப்போகும் பயிரைத்தாக்கும் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் குறைகிறது. களைச்செடிகளின் விதைகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வருவதால் சூரிய ஒளியின் வெப்பத்தால் காய்ந்து போகின்றன.

எனவே, களையின் தாக்குதலும் குறைகிறது. மழைக்கு முன்னரே புழுதிவிதைப்பாக மக்காச்சோளம் விதைப்பவர்கள், 1 எக்டேருக்கான மக்காச்சோள விதைகளை பொட்டாசியம் டை நைட்ரஜன் பாஸ்பேட் 2% கரைசல் அல்லது சைக்கோசெல் 500 பி.பி.எம் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைத்து, பின், 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இதனால் விதைகள் கெட்டுப்போகாமல் இருப்பதுடன் முளைப்புதிறனும் அதிகரிக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்: வேளாண்துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: