பழநி பங்குனி உத்திரத் திருவிழா அன்னதான மையங்களில் ஆய்வு

 

பழநி, மார்ச் 25: பழநி பங்குனி உத்திரத் திருவிழாவில் பக்தர்களுக்கு சமூக அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்ட அன்னதான மையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இவ்விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.தேரோட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு வந்திருந்தனர்.

இவர்களுக்கு வழிநெடுகிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.கலைவாணி தலைமையில் பழநி வட்டார உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அன்னதானம் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு உணவு தயாரிக்க பயன்படும் மளிகை மற்றும் காய்கறிகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கையுறை மற்றும் தலையுறைகள் அணிந்து உணவுகளை சமைக்க வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறங்களை உணவுகளில் சேர்க்கக் கூடாது. உணவு விநியோகிக்கப்பவர்கள் சுகாதாரமான உடைகள் மற்றும் கையுறைகள் அணிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

The post பழநி பங்குனி உத்திரத் திருவிழா அன்னதான மையங்களில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: