தேனி பகுதியில் தர்பூசணி, நுங்கு, ஜூஸ் விற்பனை ஜோரு: வெயிலின் தாக்கத்தால் குவியும் பொதுமக்கள்

 

தேனி, மார்ச் 24: தேனி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் நுங்கு, தர்பூசணி, ஜூஸ் விற்பனை ஜோராக நடைபெறுகிறது. சாலையோர கடைகள், பழச்சாறு கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். தேனி பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருந்த போதும், இந்த முறை கோடை காலம் துவங்குவதற்கு முன்பிருந்தே வெயில் சற்று அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கோடை துவங்கிய பின்னர் 2-3 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

இதனால் பகல் வேளைகளில் தாக்குப்பிடிக்க இயலாத அளவுக்கு வெயில் உள்ளது.இந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக வெளியில் வருவோர் மற்றும் விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்கு குளிர்ச்சியான பானங்களை பருக விரும்புகின்றனர். சிலர் ஐஸ் வாட்டர் குடித்தாலும் திருப்தியடையாமல் ஜூஸ் கடைகளை நாடி செல்கின்றனர்.

அதேவேளையில் தற்போது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் நுங்கு, தர்பூசணி, இளநீர், கரும்பு ஜூஸ் விற்பனையும் ஜோராக நடைபெற்று வருகிறது. இந்தக் கடைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. வாகனங்களில் செல்வோர் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி இளைப்பாறி செல்கிறார்கள்.

இளநீர் விலை சற்று அதிகமாக இருந்தபோதும் ஆர்வமுடன் வாங்கி பருகுகின்றனர். தர்பூசணி முழு பழமாகவும், வெட்டிவைத்தும், சர்பத் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பழச்சாறு கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. விலை குறைவு என்பதால் மிக்சர் ஜூஸ் அதிக அளவில் விற்பனை ஆகிறது. சாத்துக்குடி, மாதுளை ஜூஸ்களையும் அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி பருகுவதை காண முடிகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தேனி பகுதியில் தர்பூசணி, நுங்கு, ஜூஸ் விற்பனை ஜோரு: வெயிலின் தாக்கத்தால் குவியும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: