நத்தம் பாலப்பநாயக்கன்பட்டியில் புரவி எடுப்பு திருவிழா

நத்தம், மார்ச் 24: நத்தம் அருகே பாலப்பநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள அய்யனார், மதுரை வீரன், முக்காலி கருப்பு சுவாமிகள் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன் தினம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக ஊர் மந்தையை வந்தடைந்தது. அங்கு சுவாமி சிலைகள் கண் திறக்கப்பட்டு கோயிலை சென்றடைந்தன. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.

நேற்று மாலை அய்யனார், மதுரை வீரன், முக்காலி கருப்பு சுவாமிகள் புறப்பாடானதை தொடர்ந்து புரவி எடுப்பில் மந்தையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அலங்கரித்து வைத்திருந்த மதிலை, புரவி, கன்னிமார், நாய் உள்ளிட்ட சிலைகளுடன் வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் ஊர்வலமாக சுவாமிகள் இருப்பிடம் போய் சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாலப்பநாயக்கன்பட்டி ஊர்மக்கள் செய்திருந்தனர்.

The post நத்தம் பாலப்பநாயக்கன்பட்டியில் புரவி எடுப்பு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: