நடப்பாண்டு வெயில் அதிகமாக இருக்கும் ேகாடை வெப்ப நோய் பாதிப்பு தடுக்க அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும்

தஞ்சாவூர், மார்ச்24: கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களை தடுக்க அதிக அளவு நீர் பருக வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெயிலின் தாக்கம் கோடை காலத்தில் உள்ள வழக்கமான வெப்பநிலையை விட நடப்பு ஆண்டு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும். போது தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் மற்றும் உடலில் வியர்வை ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி உடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது.

கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும் போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக் குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப் பிடிப்பு, குறைந்த அளவு சிறு நீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு அறிகுறிகள் ஏற்படலாம். பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களை தடுக்க அதிக அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

அதிக அளவில் மோர் மற்றும் உப்பு கலந்த கஞ்சி, இளநீர் உப்பு கலந்த எலுமிச்சைசாறு மற்றும் ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் பருக வேண்டும். வெளியில் செல்லும்போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும். தேவையின்றி வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக புரதம், மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post நடப்பாண்டு வெயில் அதிகமாக இருக்கும் ேகாடை வெப்ப நோய் பாதிப்பு தடுக்க அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: