டவுன் சின்ட்ரோம் பாதித்த குழந்தைகளை உரிய சிகிச்சை மூலம் சாதனையாளராக்கலாம்” விஐடி பேராசிரியர் பேச்சு

வேலூர், மார்ச் 24: டவுன் சின்ட்ரோம் பாதித்த குழந்தைகளை பிறந்தவுடன் அடையாளம் கண்டு உரிய சிகிச்சை அளித்தால் அவர்களை சாதனையாளராக உருவாக்க முடியும் என்று வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த டவுன் சின்ட்ரோம் விழிப்புணர்வு தின கொண்டாட்டத்தில் பேசிய விஐடி பேராசிரியர் ராதா சரஸ்வதி குறிப்பிட்டார். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் டவுன் சின்ட்ரோம் விழிப்புணர்வு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் கல்பனா வரவேற்றார். தொடர்ந்து டவுன் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் நலப்பிரிவு மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு டவுன் சின்ட்ரோம் பாதிப்பு குறித்தும், இத்தகைய பாதிப்புக்குள்ளான குழந்தைகளை அடையாளம் கண்டு உரிய சிகிச்சை அளிப்பது, பயிற்சிகள் குறித்த முக்கியத்துவம் குறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் விளக்கினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேலூர் விஐடி பல்கலைக்கழக பேராசிரியர் ராதா சரஸ்வதி கலந்து கொண்டார். அப்போது அவர், ‘டவுன் சின்ட்ரோம் என்பது மரபணு ரீதியான-பிறவி நிலை. நம் உடல் கூறு செல்களால் ஆனது. அதில் 21வது ஜோடியில் கூடுதலாக ஒரு மரபணு உருவாகியிருந்தால் டவுன் சின்ட்ரோம் என்ற பிறவிநிலை குறைபாடு ஏற்படும். அதாவது இரண்டுக்கு பதில் மூன்று மரபணுக்கள் இருக்கும். மன நலிவுள்ள குழந்தைகளுக்கு இம்மையத்தில் கண், காது, இருதயம், ரத்த பரிசோதனை மற்றும் இயன்முறை, பேச்சு பயிற்சி, சிறப்பு கல்வி பயிற்சி, மனநல ஆலோசனை சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு இக்குழந்தைகள் பிறந்த உடன் கண்டறிந்து சரியான சிகிச்சையை சீரான முறையில் அளித்தால் டவுன் சின்ட்ரோமால் பாதித்த குழந்தைகளை சாதனையாளராக ஆக்கலாம்’ என்றார்.

The post டவுன் சின்ட்ரோம் பாதித்த குழந்தைகளை உரிய சிகிச்சை மூலம் சாதனையாளராக்கலாம்” விஐடி பேராசிரியர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: