திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்; விமரிசையாக இன்று தொடங்குகிறது

திருவண்ணாமலை, மார்ச் 24: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் இன்று விமரிசையாக தொடங்குகிறது. அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான விழாக்களில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் சிறப்புக்குரியது. அதன்படி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் இன்று (24ம் தேதி) விமரிசையாக தொடங்குகிறது. அதையொட்டி, காலை 10 மணி முதல் 11.45 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில், சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று இரவு 8 மணியளவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கொடி மரம் முன்பு சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.

இரவு 11 மணி அளவில், திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, நள்ளிரவு 12 மணி அளவில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதியுலா நடைபெறும். விழாவின் தொடர்ச்சியாக, நாளை(25ம் தேதி) கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடியும், 26ம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், 27 மற்றும் 28ம் தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். விழாவின் நிறைவாக, வரும் 29ம் தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகைவிடுதல் நிகழ்ச்சியும், குமரகோயிலில் மண்டகபடியும் நடைபெறும். அன்று இரவு வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் சுவாமி வீதியுலா நடைபெறும். பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, விழாவுக்கான ஏற்பாடுகளை அண்ணாமலையார் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்; விமரிசையாக இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: