அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில் அனுப்பி ஆசிரியரிடம் ₹33.14 லட்சம் மோசடி; வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வேலூர்: குடியாத்தம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரிடம் அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில் அனுப்பி ₹33.14 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் சத்யா (62). இவருக்கு பி.எம்.டபிள்யூ ஆட்டோ மொபைல் விருது அதிர்ஷ்டசாலி ஆக தேர்வாகியுள்ளதாகவும், அதற்கு 4 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள் பரிசாக கிடைக்கும் என்று மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதனை நம்பி சத்யா பேசியுள்ளார். அப்போது பரிசு கூப்பனை பணமாக பெறுவதற்கு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பி பல தவணைகளில் 2021ம் ஆண்டிலிருந்து தற்போது வரை பணம் கட்ட வைத்துள்ளனர்.

பின்னர் வெளிநாட்டு பணத்தை மாற்றுவதற்கு ஆர்பிஐக்கு கட்டண தொகை செலுத்த வேண்டும் என்று கூறி மேலும் பல தவணைகளில் மர்ம நபர்கள் பணத்தை பறித்துள்ளனர். பின்னர் பேங்க் ஆப் இங்கிலாந்து ஏடிஎம் மாஸ்டர் கார்டு ஒன்றை அனுப்பி அதை ஆக்டிவேட் செய்து பணம் பெற கட்டண தொகை வசூலித்துள்ளனர்.

இப்படி அதிர்ஷ்டசாலி விருது என்ற பெயரில் மொத்தம் ₹33 லட்சத்து 14 ஆயிரத்து 642ஐ மோசடி செய்து அபகரித்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் இணைதளம் www.cybercrime.gov.in வாயிலாக சத்யா புகாரை பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி மணிவண்ணன் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா, எஸ்ஐ சதீஷ்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில் அனுப்பி ஆசிரியரிடம் ₹33.14 லட்சம் மோசடி; வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: