திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்: இன்றும் நாளையும் விடுமுறை

திருவண்ணாமலை: மக்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் மூன்றாம் நாளான நேற்று திருவண்ணாமலை தொகுதியில் ஒருவரும், ஆரணி தொகுதியில் 4 பேர் மனுதாக்கல் செய்தனர். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. வரும் 27ம் தேதி வரை மனுதாக்கல் நடைபெற உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வேட்புமனுதாக்கல் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது.

திருவண்ணாமலை ெதாகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் பாஸ்கரபாண்டியனும், ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக டிஆர்ஓ பிரியதர்ஷினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கலுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளின் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களான திருவண்ணாமலை ஆர்டிஓ மந்தாகினி, ஆரணி ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் ஆகியோரது அலுவலகங்களிலும் வேட்புமனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அங்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிைலயில், வேட்புமனுதாக்கலின் மூன்றாம் நாளான நேற்று திருவண்ணாமலை தொகுயில் சுயேட்சை வேட்பாளர் சி.விஜயகுமார், தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் பாஸ்கரபாண்டியனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் நேற்று வரை 2 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

அதேபோல், ஆரணி தொகுதியில் போட்டியிட வீரதியாகி விஸ்நாதாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் பெ.நாகராஜன், சுயேட்சை வேட்பாளர்கள் ந.பாபு, எச். முகமதுசித்திக் ஆகியோர் நேற்று மனுதாக்கல் செய்தனர். அதன்படி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் நேற்று மொத்தம் 4 பேர் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனுதாக்கலை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் டவுன் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றவர்களை பரிசோதித்த பிறகே அனுமதித்தனர்.

இந்நிலையில், சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை தினம் என்பதால், இன்றும், நாளையும் மனுதாக்கல் நடைபெறாது. எனவே, 25ம் தேதி முதுல் 27ம் தேதி வரை இன்னும் 3 நாட்கள் மட்டுமே மனுதாக்கலுக்கு அவகாசம் உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக, பாஜக, பாமக ஆகிய அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, வரும் 25ம் தேதி முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்: இன்றும் நாளையும் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: