மாவட்ட தேர்தல் அலுவலர் சாரு தலைமையில் நடந்தது

திருவாரூர், மார்ச் 23: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 4 எம்எல்ஏ தொகுதிகளுக்கும் கணினி வாயிலாக ரேண்டம் முறையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஓதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் சாரு தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்புவதற்காக தேர்தல் ஆணையத்தின் கணினி மென்பொருள் வழியாக ரேண்டம் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாரு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அவர் பேசுகையில்,
இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொது தேர்தலுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாகை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19ம்தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 27ம்தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை 28ம் தேதியும், வேட்பு மனு திரும்ப பெறும் நாள் 30ம்தேதியும் ஆகும்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி என மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 758 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 35 ஆயிரத்து 117 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பினையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்காக திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு 330 வாக்குப்பதிவு இயந்திரமும், 357 வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரமும், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு 369 வாக்குப்பதிவு இயந்திரமும், 400 வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரமும், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு 378 வாக்குப்பதிவு இயந்திரமும், 409 வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரமும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு 342 வாக்குப்பதிவு இயந்திரமும், 370 வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரமும், தேர்தல் ஆணையத்தின் கணினி மென்பொருள் வழியாக முதல்நிலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டம் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்.டி.ஒவுமான சங்கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வேணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மாவட்ட தேர்தல் அலுவலர் சாரு தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: