நாடாளுமன்ற தேர்தல் பணி முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், மார்ச் 23: திருவாரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல்நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பக்கடிதம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் பாதுகாப்பு பணியில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் அறை எண் 19-ல் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நேரில் அணுகி எழுத்து மூலமான விருப்பக் கடிதத்தினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு 04366 290080 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அறியலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தல் பணி முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: