நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் விறுவிறுப்பு: 1795 மின்னணு இயந்திரங்கள், விவிபேட் அனுப்பி வைப்பு

நெல்லை, மார்ச் 23: நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு 1795 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.19ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை, பாளை, நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம், அம்பை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆலங்குளம் தவிர்த்து நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள நெல்லை, பாளை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1491 வாக்குசாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 1795 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்காளர்கள், யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை கண்டறியும் வகையில் மொத்தம் 1944 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த 1795 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள், நெல்லை தாசில்தார் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடோனில் இருந்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன், தனி வாகனங்களில் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இப்பணிகளை கலெக்டர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மற்றும் தாசில்தார்கள் உடனிருந்தனர்.

இந்த பணிகள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மின்னணு இயந்திரங்கள், அந்தந்த தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்படும். பின்னர் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம்தேதிக்கு ஒரு நாள் முன்னதாக ஏப்.18ம்தேதி அன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

The post நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் விறுவிறுப்பு: 1795 மின்னணு இயந்திரங்கள், விவிபேட் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: