பறக்கும் படையினரின் சோதனையை நள்ளிரவில் ஆய்வு செய்த கலெக்டர்

 

விருதுநகர், மார்ச் 22: விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனையை கலெக்டர் ஜெயசீலன் நள்ளிரவில் ஆய்வு செய்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை பெற்று சென்று தாக்கல் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை அமுலில் உள்ள நிலையில் வாக்காளர்களை கவர்வதற்கு பரிசு பொருட்கள், பணம் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் உள்ளன. இதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு 3 ஷிப்ட் நடைமுறையில் 24 மணி நேர கண்காணிப்பு தொடர்ந்து வருகிறது. கண்காணிக்கும் பணியில் உள்ள பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் தங்களது பணியை முறையாக, முழுமையாக செய்கின்றனவா என்பதை அறிய வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை அறிய முடியும். இந்நிலையில் கலெக்டர் ஜெயசீலன் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் ஆய்வு நடத்தும் பகுதிகளை கண்டறிந்தார். அதை தொடர்ந்து விருதுநகர் அல்லம்பட்டி ரோடு, மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் நிலை கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை சோதனையிடும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

The post பறக்கும் படையினரின் சோதனையை நள்ளிரவில் ஆய்வு செய்த கலெக்டர் appeared first on Dinakaran.

Related Stories: