தீ விபத்துகளை தடுக்கும் முறை ஓவர்லோடு மின் உபயோகம் செய்யக்கூடாது: தீயணைப்புத்துறை ஆலோசனை

 

ஆண்டிபட்டி, மார்ச் 22: தீ விபத்துகளை தடுக்கும் முறை குறித்து தீயணைப்புத்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். வீட்டில் உள்ள பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விட வேண்டும். முற்றிலும் அணையாத தீக்குச்சிகளை குப்பை கூடையில் போடக்கூடாது. ஜன்னல் மற்றும் மாடியில் இருந்தும் வீசக்கூடாது.

படுக்கையில் இருந்து கொண்டே புகை பிடிக்கக்கூடாது. மின்சாரம் இல்லாதபோது பயன்படுத்தப்படும் சிம்னி விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றை மின்சாரம் வந்தவுடன் உடனடியாக அணைத்து விட வேண்டும். குழந்தைகளை மின்னோட்டமுள்ள மின்சாதனங்களுடன் விளையாட அனுமதிக்கக் கூடாது.பொருட்களை அடுப்பை தாண்டி எட்டி எடுக்கும் வகையில் வைக்கக் கூடாது. சமையல் செய்யும்போது செயற்கை இழைழு ஆடைகளை தவிர்த்து, பருத்தி மேலாடைகளை அணிய வேண்டும்.

சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து எடுக்க இடுக்கிகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது. தீக்குச்சி அல்லது லைட்டரை எரியும் நிலையில் வைத்து சிலிண்டர் வால்வை திறக்க வேண்டும். பர்னரின் உபயோகம் தேவை இல்லை எனில் அதன் வால்வு சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ரப்பர் குழாயை அடிக்கடி விரிசல் மற்றும் துளைகள் ஏற்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். இரவில் சிலிண்டர் வால்வை அவசியம் மூட வேண்டும்.

மாற்றுச் சிலிண்டர் வாங்கும் போது வாயுக்கசிவு உள்ளதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.மின்சுற்றின் அளவுக்கு மேல் (ஓவர்லோடு) மின்உபயோகம் செய்யக்கூடாது. தரம் வாய்ந்த வயர்கள், சுவிட்சுகளை பயன்படுத்த வேண்டும். ப்யூஸ்கள், சர்க்யூட் பிரேக்கர்கள் போன்ற பாதுகாப்பு சாதனங்களை தேவையான இடங்களில் பொருத்தி முறைப்படி பராமரிக்க வேண்டும். ஓவர்சைஸ் ப்யூஸ் பொருத்தக் கூடாது. தரையிணைப்பு கடத்தி எனப்படும் ‘எர்த் கனெக்ஷன்’ நிரந்தரமானதாக சரியான அளவில் அமைக்க வேண்டும்.

The post தீ விபத்துகளை தடுக்கும் முறை ஓவர்லோடு மின் உபயோகம் செய்யக்கூடாது: தீயணைப்புத்துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: