பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு போதிய உணவு,குடிநீர் வழங்க கோரிக்கை

 

சிவகங்கை, மார்ச் 22: தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு போதிய உணவு, குடிநீர் வழங்காததால் அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். சட்டமன்ற, மக்களவை தேர்தல் உள்ளிட்ட அனை த்து தேர்தல் பணியிலும் ஆசிரியர், அரசு ஊழியர்கள், போலீசார் பணியாற்றுகின்றனர். இதில் அரசு பெண் ஊழியர்களும், பெண் போலீசாரும் அதிகப்படியான எண்ணிக்கையில் பணி செய்கின்றனர். இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

போலீசாரும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு விண்ணப்பம் பெறுதல் மற்றும் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுவதால் அலுவலகப் பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு போதிய உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் கூட வழங்கப்பட வில்லை என புகார் எழுந்துள்ளது.

வெறும் 300 கிராம் தயிர் சாதம், சிறிய அளவிலான ஊறுகாய் பாக்கெட் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் கடுமையான வெயிலில் பணியாற்றும் நிலையிலும், சாப்பிடுவதற்கான நேரத்திலும் தண்ணீர் தேவைப்படும் நிலையில் அவ்வாறு வழங்க எந்த ஏற்பாடும் தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட வில்லை. இதனால் போலீசார் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் முழுவதும் வெயில் நேரத்தில் கூடுதலாக குடிநீர் தேவைப்படுகிறது. அதையும் சொந்த செலவிலேயே சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் சாப்பிடுவதற்கு கூட சரியான உணவு, குடிநீர் கொடுக்க நடவடிக்கை இல்லை. உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு போதிய உணவு,குடிநீர் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: