தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

 

சிவகங்கை, மார்ச் 22: ஆசிரியர்களுக்கு தொலை தூரத்தில் தேர்தல் பணி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், கலெக்டர் ஆஷாஅஜித்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமனம் செய்யப்படுகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதி மாற்றி பணி வழங்குவதால் சுமார் 100 கி.மீக்கு அப்பால் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இவ்வாறு தொலை தூரத்தில் பணி வழங்காமல் பணிக்கு செல்பவர்களின் வாக்கு உள்ள வாக்குச்சாவடி தவிர்த்து அருகாமையில் உள்ள பிற வாக்குச்சாவடிகளில் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். தேர்தல் நடக்க இருக்கும் முதல் நாள் அன்று தான் வாக்குச்சாவடிக்கான பணி ஆணை வழங்குவதால் பணியாற்றும் வாக்குச்சாவடியை கண்டறிந்து பணிக்கு செல்வதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது.

மேலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பஸ் வசதியில்லாத குக்கிராமங்களில் உள்ளதால் வாக்குச்சாவடியை அடையாளம் காண்பது, தேர்தல் பணிக்கு செல்வது, பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவதும் பெரிய சவாலாகவே உள்ளது. குறிப்பாக பெண் ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே மண்டல அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்ல உரிய பஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல்
பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

100சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்றை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்த விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: