போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் ஆர்டிஓ தொடங்கி வைத்தார் ஆரணி மக்களவை தேர்தலையொட்டி

ஆரணி, மார்ச் 22: ஆரணியில் மக்களவை தேர்தலையொட்டி நடந்த போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், ஆரணி மக்களவை தொகுதியில் தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை, கலவரங்கள், சமூக விரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும், காவல் துறை எந்த நேரமும் விழிப்புடன் செயல்படும் என்பதை வெளிப்படுத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் ஆரணியில் நேற்று நடந்தது.

டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் விநாயமூர்த்தி, எஸ்ஐ சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகர காவல் நிலையத்தில் தொடங்கி பழைய, புதிய பஸ் நிலையம், எம்ஜிஆர் சிலை, காந்தி சாலை, அண்ணா சிலை வழியாக மீண்டும் அதே காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். பேண்ட் இசையுடன் நடந்த போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

The post போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் ஆர்டிஓ தொடங்கி வைத்தார் ஆரணி மக்களவை தேர்தலையொட்டி appeared first on Dinakaran.

Related Stories: