மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து வீடு, வீடாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லை, மார்ச் 21: நெல்லை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம், உறுதிமொழி ஏற்பு, சுடர் ஓட்டம், மௌனமொழி நாடகம், கிராமிய நடனம், வாக்களிப்பதின் கடமை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த தேர்தலின் போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ள வாக்குச் சாவடிகளை தேர்வு செய்து அப்பகுதிகளிலுள்ள தெருக்களில் தேர்தல் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணிகள், வாக்காளர் கல்வியறிவு இயக்கத்தை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் குறைந்த வாக்குப்பதிவு பகுதிகளிலும், பிற இடங்களிலும் இளம் வாக்காளர்கள், பொதுமக்கள், அனைவரிடமும் வீடு, வீடாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நெல்லை ஆர்டிஓ கண்ணா கருப்பையா தலைமையில் நெல்லை தாலுகா, சங்கர்நகர், கோடீஸ்வரன் நகர், வேதாத்திரி நகர், அருந்ததியர் காலனி மற்றும் பேச்சி நகர் போன்ற பல்வேறு இடங்களில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி வாக்காளர் கல்வியறிவு இயக்கம் மாணவிகள் மூலம் வாக்காளர்களை வீடுவீடாகச் சந்தித்து தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகளில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டினர். மேலும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் துரைக்குடியிருப்பு பகுதியில் தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் செயல்பட்டு வரும் வாக்காளர் கல்வியறிவு இயக்கம் மாணவர்கள் மூலம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில், நெல்லை தாசில்தார் ஜெயலெட்சுமி, மானூர் தாசில்தார் முருகன், துணை தாசில்தார் பழனி, ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், வாக்காளர் கல்வியறிவு இயக்க மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து வீடு, வீடாக விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: